தமிழ் குழந்தைப் பெயர்கள்

பேயுடன் ஒரு பேட்டி – திரைவிமர்சனம்

 

peaiகணவன், மனைவியான நாயகனும் நாயகியும் வெளிநாட்டில் இருந்து, தங்களுடைய சொந்த கிராமத்திற்கு வருகிறார்கள். அந்த கிராமத்தில் நாயகனின் அப்பா கட்டிய பூர்வீக வீடு ஒன்று இருக்கிறது. தனது அப்பா ஆசை, ஆசையாக கட்டிய வீடு என்பதால், அந்த வீட்டை பிரிய நாயகனுக்கு மனமில்லை. ஆகவே, அந்த வீட்டிலேயே தங்க முடிவு செய்கிறான்.

இருவரும் புதுமண தம்பதிகள் என்பதால் அந்த வீட்டில் இருவரும் அன்யோன்யமாய் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், அந்த வீட்டில் உள்ள சில பொருட்கள் மர்மமான முறையில் இடம் மாறுவது நாயகிக்கு சந்தேகத்தை தருகிறது. இதற்கு காரணம் வேலைக்காரிதான் என்று சந்தேகப்படும் நாயகி, இதற்கான காரணம் கண்டறிய வீடு முழுவதும் சிசி டிவி பொருத்துகின்றனர்.

சிசிடிவில் பதிவான வீடியோவை பார்க்கும் நாயகி ஆச்சர்யமடைகிறார். கதவு தானாக திறந்து, மூடுவது போன்ற காட்சியெல்லாம் பார்த்து இந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று அஞ்சுகிறாள். இதை தனது கணவனான நாயகனிடம் கூறவே, அவன் அதை நம்ப மறுக்கிறான். ஒருகட்டத்தில் அந்த வீட்டில் பேய் இருப்பதை நாயகனும் நம்பத் தொடங்குகிறான்.

உடனே, அந்த பேயை விரட்டுவதற்குண்டான வேலைகளில் களமிறங்குகிறார்கள். ஆனால், அது அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. கடைசியில், ஒரு பெண் மந்திரவாதியைக் கூட்டி வந்து அந்த பேயை விரட்ட பார்க்கிறார்கள். அவள் ஒரு பொம்மையின் உடம்பில் அந்த பேய் இருப்பதாக கூறி, அந்த பொம்மையை அழிக்கப் பார்க்கிறாள். ஆனால், அந்த பொம்மையை அவளால் அழிக்க முடிவதில்லை.

அந்த பேய்க்கு தீராத ஆசை ஒன்று இருப்பதால்தான் இந்த வீட்டை விட்டு செல்ல மறுக்கிறது என்று கூறி, இந்த வீட்டை கட்டிய நாயகனின் அப்பாவுடைய பழைய பொருட்கள் ஏதும் இருக்கிறதா? என்று அந்த மந்திரவாதி கேட்கிறாள்.

அதற்கு நாயகன், தான் இந்த வீட்டுக்கு வரும் போது, வேலைக்காரி தன்னிடம் கொடுத்த புத்தகத்தை மந்திரவாதியிடம் கொடுக்கிறான். அதை படித்துப் பார்க்கும் மந்திரவாதி, நாயகனின் அப்பாவிடம் வேலைக்காரனாக இருந்தவன்தான் இந்த வீட்டில் பேயாக உலாவுவதாக கூறுகிறான்.

வேலைக்காரன் பேயாக வந்து இவர்களை பயமுறுத்த நினைக்க காரணம் என்ன? அந்த பேயின் நிறைவேறாத ஆசை என்ன? என்பதை பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் ஒரே வீட்டில் வைத்து படமாக்கியிருக்கிறார்கள். ஒரு பேய் படம் என்பதற்குண்டான எந்தவிதமான திகிலும் இந்த படத்தை பார்க்கும்போது நமக்கு ஏற்படவில்லை. நமக்கு ஒரு காட்சியில்கூட பயம் ஏற்படல்லை என்பதுதான் ரொம்பவும் கவனிக்க வேண்டியது.

படத்தில் ஒரே காட்சிகள் மாறி மாறி வருவது ரொம்பவும் போரடிக்க வைக்கிறது. அதேபோல், காமெடி என்ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நமக்கு வெறுப்பை வரவழைத்திருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களும் எந்தவொரு காட்சியிலும் நம்மை கவரவில்லை.

நிறைய காட்சிகள் பழைய பேய் படங்களில் இருந்து காப்பி அடித்ததுபோல் இருக்கிறது. மந்திரவாதியை இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் இதுபோல் காட்டியிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு மாடர்ன் மந்திரவாதி பெண்ணாக வந்திருக்கிறார். இசையும் ரசிக்கும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘பேயுடன் ஒரு பேட்டி’ பார்க்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *