தமிழ் குழந்தைப் பெயர்கள்

திறந்திடு சீசே திரைவிமர்சனம்

thirandutu

நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயணன் இருவரும் ஒரு பப்பில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பப்புக்கு ஒருநாள் தன்ஷிகா வருகிறார். அளவுக்கு அதிகமாக குடிக்கும் தன்ஷிகா, போதை தலைக்கேறி தள்ளாடுகிறார்.

நள்ளிரவுக்கு பின் அங்கிருந்த கூட்டம் கலைகிறது. தன்ஷிகா மட்டும் இருக்கிறார். பப்பில் அளவுக்கு அதிகமான போதையில் விழுந்த பெண்களை அனுபவிக்கும் வழக்கம் கொண்ட வீரவன் ஸ்டாலின், நாராயண் ஆகியோரின் பார்வை தன்ஷிகா மீது விழுகிறது. அவளை காமக்கண் கொண்டு பார்க்கிறார்கள்.

அரை மயக்கத்தில் தடுமாறிக்கொண்டே பாத்ரூம் செல்கிறார் தன்ஷிகா. சிறிது நேரம் கழித்து பார்த்தால், அவர் பாத்ரூமில் விழுந்து மயங்கி கிடக்கிறார். வீரவனும், நாராயணும் அவளை தூக்கி வந்து சோபாவில் கிடத்துகிறார்கள்.

மயக்கம் தெளிந்து எழும் தன்ஷிகா, தனது உடல்நிலையில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்து திடுக்கிடுகிறாள். தான் போதை மயக்கத்தில் இருந்தபோது யாரோ பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக நினைத்து பதறுகிறாள்.

அந்த இடத்தில் வீரவனும், நாரயண் மட்டுமே இருப்பதால் அவர்களில் யாரோ ஒருவன்தான் தன்னை பலாத்காரம் செய்திருப்பதாக அவர்களுடன் சண்டை போடுகிறாள். அவன் யார் என்பது தெரியாமல் இங்கிருந்து போக மாட்டேன் என்றும் பிடிவாதமாக நின்று மிரட்டுகிறாள்.

வீரவன் அவளை கெடுத்திருப்பான் என்று நாராயணும், நாராயண் கெடுத்திருப்பான் என்று வீரவனும் நினைத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடக்கிறது. ஒருகட்டத்தில் இதில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்று முடிவு செய்து, பழியை தன்ஷிகா பக்கம் திருப்பி விடுகிறார்கள். போதையில் அவள் உளறுவதாக கூறுகிறார்கள். ஆனால், அவள் அதை மறுக்கிறாள்.

தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிப்பதற்காக தங்களுக்கு தெரிந்த பெண் டாக்டர் ஒருவரை வீரவனும், நாராயணும் வரவழைக்கிறார்கள். அவர் வந்து பரிசோதித்துவிட்டு, தன்ஷிகா பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்கிறார். இதனால் நிலைமை இன்னும் மோசமாகிறது. உங்களில் யார் குற்றவாளி என்று சொல்லாவிட்டால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார் தன்ஷிகா.

கடைசியில் குடிக்கு அடிமையான வீரவன் மீது சந்தேக பார்வை விழுகிறது. ஏனென்றால், வீரவன் குடித்துவிட்டால் குடிபோதையில் என்ன செய்தோம் என்பதே அவனுக்கு தெரியாது. அதனால், தான்தான் இதைச் செய்தோமா? என்று புரியாமல் விழிக்கிறான். பின்னர் அரை மனதுடன் தான் இதை செய்ததாக ஒத்துக் கொள்கிறான். அப்போது வீரவனைத் தேடி  அவனது மனைவி அஞ்சனா கீர்த்தி அங்கே வருகிறாள். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடக்கிறது.

இறுதியில், தன்ஷிகாவை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பது தெரிந்ததா? அந்த எதிர்பாராத சம்பவம் என்ன? என்பதை கூறியிருக்கிறார்கள்.

நாயகனான வீரவன் ஸ்டாலின், படத்தில் நடித்திருப்பதுடன், தயாரிக்கவும் செய்திருக்கிறார். புதுமுகம் போல் இல்லாமல், அனுபவமிக்க நடிகர் போல் சிறப்பாக நடித்துள்ளார்.

தன்ஷிகா தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தை அவரை தவிர வேறு எந்த நடிகையும் இத்தனை சிறப்பாய் செய்திருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.

நாராயண் காமெடியில் கலக்கியிருக்கிறார். தன்மீது பாலியல் பலாத்கார குற்றம் சுமத்தப்பட்டதும், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் பதறித் துடித்து உளறிக் கொட்டுவது நல்ல காமெடி. வீரவனின் மனைவியாக வரும் அஞ்சனா கீர்த்தி படத்தில் சில காட்சிகளே வருகிறார். இருப்பினும் அவரது நடிப்பு ஓகேதான்.

காமெடி கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார் நிமேஷ் வர்ஷன். கதை முழுக்க ஒரே இரவில், அதுவும் ஒரே இடத்தில் நடப்பதால் பரபரப்பில்லாமல் காட்சிகள் நகர்கிறது. இந்த படத்தின் மூலம் ஒரு நல்ல சமூக கருத்தை சொல்லியதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ‘திறந்திடு சீசே’ வழிகாட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *