தமிழ் குழந்தைப் பெயர்கள்

இருவர் ஒன்றானால் திரைவிமர்சனம்

iruvar

நாயகன் பிரபு ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் இருக்கும் பெண்கள் நாயகன் மீது காதல்வயப்படுகிறார்கள். அவரிடம் நேரடியாக தங்கள் காதலையும் கூறுகிறார்கள். ஆனால், நாயகனோ, அவர்கள் அனைவரிடமும் தான் நட்பாகவே பழகுவதாக கூறி, காதலை நிராகரிக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் நாயகி மாலினியை பார்க்கும் பிரபு, அவளைப் பார்த்தவுடனேயே காதல் துளிர்விடுகிறது. காதலை சொல்வதற்காக அவர் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்கிறார். இதைப் பிடிக்காத நாயகி ஒருகட்டத்தில் அவனை நேரில் அழைத்து திட்டுவது மட்டுமல்லாமல் கன்னத்தில் அறைந்தும் விடுகிறாள்.

அதன்பிறகு தன் பின்னால் சுற்றமாட்டான் என நினைக்கும் நாயகியை மறுபடியும் பின்தொடர்கிறான் நாயகன். ஆனால், ஒருசில நாட்களில் நாயகியை பார்க்க நாயகன் வருவதில்லை. நீண்டநாட்களாக தன் பின்னால் சுற்றிவந்தவன் தற்போது ஏன் வரவில்லை என்று நினைக்கும் நாயகிக்கு அவனை பார்க்கும் ஆர்வம் வருகிறது. எனவே, அவன் தன்னை சந்தித்த இடங்களில் எல்லாம் அவனை போய் பார்க்கிறாள். அவனுக்குத் தெரியாமலேயே அவனை பின்தொடர்கிறாள்.

ஒருகட்டத்தில் அவன்மீது காதல் துளிர்விட, அவனிடம் காதல் சொல்லப் போகிறாள். ஆனால், நாயகனோ இவளது காதலை நிராகரிக்கிறான். இதனால் அதிர்ச்சி அடையும் நாயகி, தன்னிடம் காதல் சொல்ல வந்த நாயகன் இப்போது ஏன் தன் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று குழப்பமடைகிறாள்.

காதலை ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் என்ன? இருவரும் கடைசியில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தில் காதலர்களாக நடித்திருக்கும் நாயகன் பிரபுவும், நாயகி மாலினியும் நிஜத்திலும் காதலர்களாக இருந்து வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தவர்கள். அதனால்தான் என்னவோ, காதல் காட்சிகளில் ரொம்பவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் பிரபு, இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். நடனம், வசனம் உச்சரிப்பு என அனைத்திலும் பாராட்டு பெறுகிறார். ஹீரோயிசம் இல்லாமல் யதார்த்தமான இளைஞனாக காட்சிகளில் பதிந்திருக்கிறார். நாயகி மாலினிக்கு இது முதல் படம் என்று கூற முடியாத அளவிற்கு நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குனர் அழகிய காதல் கதையை மிகவும் யதார்த்தமான பதிவாக எடுத்திருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் சினிமாத்தனம் இல்லாமல் இருப்பது அழகு. நாயகனுக்கு ஆக்‌ஷன் காட்சிகள், நாயகிக்கு பில்டப் இல்லாமலும் மிகவும் அழகான காதல் கதையை கொடுத்ததற்கு பாராட்டு.

இசையமைப்பாளர் குரு கிருஷ்ணன் ஐந்து பாடல்களை மிகவும் தரமாக கொடுத்திருக்கிறார். வார்த்தைகள் புரியும் படி மென்மையான இசையில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். படத்திற்கு பலமாக இவரது இசை அமைந்துள்ளது. குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘இருவர் ஒன்றானால்’ காதல் கவிதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *