தமிழ் குழந்தைப் பெயர்கள்

இயற்கையை விரோதிக்காத அறிவியலை ஆராதிப்போம்

அறிவியல் என்றாலே முற்போக்கு வளர்ச்சியின் வாகனம், ஒரு ஆயுதத்துக்கு ஒப்பானது, அதை நாம் பயன்படுத்தவும் முடியும் அது நம்மை பலியாக்கிவிடவும் கூடும்.

அதனால்தான், நவம்பர் 10ம் திகதியை அறிவியலுக்கு என இல்லாமல் அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.

கடவுளை நம்பாதவர்கள் உண்டு. ஆனால், அறிவியலை நம்பாதவர்கள் கடவுளை நம்புகிறவர்களிலும் இல்லை.

மனிதகுலத்துக்கு ஒரு மகத்தான வாழ்க்கை நிலையை அறிவியலால்தான் கொடுக்க முடிந்தது.

பறப்பது, மிதப்பது, உலகையே ஒரு திரையில் பார்ப்பது என அறிவியலின் முன்னேற்றப்படிகளில் மனிதன் செய்துகொண்டிருக்கும் சாதனை மனித குலத்திற்கே வியப்பளிக்கிறது.

அறிவியல் சாதனம் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டாலும் கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வருவதுபோல குறுகிய காலத்துக்குள்ளே கடைசி குடிமகன் கை வரை வந்துவிடுகிறது.

இப்படி ஒருபுறம் அறிவியலை நினைத்து மகிழ்ச்சியடைந்தாலும், எந்த காரணத்தாலோ போர் ஏற்பட்டால் அதன் அறிவியல் பேரழிவுகள் பெரும் துக்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, இரண்டு நாடுகளுக்கு இடையிலோ, இரண்டு கூட்டணி நாடுகளுக்கு இடையிலோ போர்மூளும் நிலையில், அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட, மேல் மட்டத்தில், மக்களை காக்கும் கடமையில் இருப்பவர்களுக்கு சகிப்புத்தன்மையும், பிடிவாத தளர்வும், தீர்வு காணும் ஞானமும் இருக்கவில்லை என்று தானே அர்த்தம்.

போரில் ஈடுபடும் இரண்டு நாடுகளுக்கும் சமுதாயத்தில் தங்கள் பிரச்சினைகளுக்காக சண்டைபோட்டு, சட்டைகிழிந்து, சட்டத்தின்முன் குற்றவாளியாக நிற்கும் சாமானியனுக்கும் கொள்கை வித்தியாசமில்லை.

இதனால், சாதனங்களை உருவாக்குகிற அறிவியலை போல சமாதானங்களை உருவாக்கும் அறிவியலும் நமக்கு உடனடி தேவையாக உள்ளது.

வேளாண்மையிலும் ரசாயன உரம் கலக்காத பயிர் வளர்ச்சிக்கு அறிவியல் வழிகாட்ட வேண்டும். ரசாயனங்களும் இயற்கையிலிருந்துதான் பிரித்தெடுக்கப்படுகிறது.

அது அப்படியே நிலைத்துவிடாமல் மீண்டும் இயற்கை மயமாக்குவதுதான் பாதுகாப்பு அறிவியல். உபயோக பொருள்களிலும் பிளாஸ்டிக் பொருள்கள் மக்கிப்போகமல் இருந்துகொண்டு இயற்கையை சீரழிக்கின்றன.

கடல்களிலும் நிலப்பரப்பிலும் பெரிய தீவுகளை போல இந்த செயற்கை கழிவுகள் சேர்ந்துகொண்டு இட ஆக்கிரமிப்பு செய்கின்றன. இயற்கை சுழற்சியை எதிர்க்கின்றன.

இவைகளை மறுசுழற்சி செய்வதில் புதிதாக தயாரிப்பதைவிட பலமடங்கு செலவாவதால் அந்த முயற்சியும் கண்துடைப்புதான். அவைகளை பயன்படுத்தி சாலை அமைப்பதும் போதுமான தீர்வல்ல.

இவ்வளவு பெரிய சீர்கேட்டுக்கு இதுவரை சரியான தீர்வு காணாதது நம் அறிவியல் சக்தியின் இயலாமையே. பூமியில் இவ்வளவு பெரிய சிக்கலை வைத்துக்கொண்டு வேற்றுக்கிரகங்களை ஆய்வுசெய்வதும் அறிவியலுக்கு ஆரோக்கியமான நகர்வு அல்ல.

பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவதில்லை சரிதான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்குகளின் புதைபடிமங்கள் அப்படியே கிடைக்கிறதே.

இயற்கையான அந்த உடலை ஏன் இயற்கையால் கரிம கனிம பொருள்களாக மாற்றமுடியாமல் போனது. அந்த இடத்தில் உள்ள இயற்கையின் பலவீனமா?

பூமிக்கு தீங்கு செய்யுமானால், அந்த அறிவியல், மனிதனுக்கு பயன்பட்டுக் கொண்டிருப்பதாக சொல்வது ஒரு தொலைநோக்கு பார்வையின்மையே.

மனிதனால் ஜீரணிக்க முடியாததை இயற்கை வைத்திருக்கலாம் இயற்கையால் ஜீரணிக்க முடியாததை மனிதன் வைத்திருக்கவே கூடாது.

world_science_day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *