தமிழ் குழந்தைப் பெயர்கள்

இந்தியா பாகிஸ்தான் திரைவிமர்சனம்

india-pakistan

வக்கீலான விஜய் ஆண்டனி சென்னையில் வக்கீல் அலுவலகம் வைப்பதற்காக புரோக்கர் ஜெகன் மூலம் வீடு பார்க்கிறார். வீட்டின் உரிமையாளர் வாடகையாக ரூபாய் 20 ஆயிரமும் அட்வான்ஸ் ரூபாய் 2 லட்சமும் கேட்கிறார். இந்த தொகை அதிகம் என்று நினைக்கும் விஜய் ஆண்டனி, அதே வீட்டை வேறொரு புரோக்கர் மூலம் பார்க்கும் நாயகி சுஷ்மா ராஜுடன் சேர்ந்து அந்த அலுவலகத்தை பேசி முடிக்கின்றார்.

இரண்டு பேருமே வக்கீல் என்பதை புரோக்கர்கள் மறைத்து விடுகிறார்கள். ஆனால், அலுவலகம் தொடங்கிய மறுநாள் பெயர்ப் பலகை வைக்கும்போதுதான் இந்த உண்மை இருவருக்கும் தெரியவருகிறது. தொழில் போட்டி என்பதால், இவர்கள் எலியும் பூனையும்போல் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
பின்னர் ஒரு வழியாக இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகின்றனர். அதாவது, யாருக்கு முதல் கேஸ் கிடைக்கிறதோ அவர்கள்தான் இந்த அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்ற இந்த யோசனையை இருவரும் ஏற்கின்றனர். ஆனால் இரண்டு பேருக்கு கேஸ் கிடைக்காத நிலை எற்படுகிறது. இந்த நிலையில், ஜெகன் மூலம் இருவருக்கும் எதிரும் புதிருமான சிவில் கேஸ் கிடைக்கிறது.
இதில் பசுபதி சார்பாக விஜய் ஆண்டனியும், எம்.எஸ்.பாஸ்கர் சார்பாக சுஷ்மாவும் வாதாடுகிறார்கள். இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் கேஸ் கிடைத்ததால் இவர்கள் ஒப்பந்தமும் திருத்தப்பட்டு, இந்த கேஸில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று மாறுகிறது.
இறுதியில் இந்த கேஸில் வெற்றி பெற்றது யார்? கோட்டை விட்டது யார்? இவர்களின் ஈகோ இவர்களின் போக்கை எப்படி மாற்றியது என்பதை காமெடியோடு சொல்லியிருக்கிறார்கள்.
நான், சலீம் என கிரைம் த்ரில்லர் கதையில் கலக்கிக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி முதன் முதலாக நகைச்சுவை களத்தில் குதித்துள்ளார். நகைச்சுவையில் நடிக்க ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார். நகைச்சுவையில் விஜய் ஆண்டனி சற்று சரிந்தாலும் பக்க பலமாக இருக்கும் ஜெகன், பசுபதி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்கள்.
நாயகி சுஷ்மா ராஜ் பார்ப்பதற்கு அனுஷ்கா சாயலில் இருக்கிறார். அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் இயக்குனர் ஆனந்த் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட வேண்டும் என்று முடிவோடு களம் இறங்கியிருக்கிறார். முழுநீள நகைச்சுவை படத்தை நகைச்சுவையில் தேர்ந்த நடிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை சிரிப்பு மழை பொழிகிறது. குறிப்பாக பசுபதி, எம்.எஸ்.பாஸ்கர் கோஷ்டி செய்யும் கலாட்டாக்களால் திரையரங்கத்தில் சரவெடி வெடிக்க வைத்திருக்கிறார்.
தீனா தேவராஜன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை சிறப்பாக செய்திருக்கிறார். என் ஓம் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இந்தியா பாகிஸ்தான்’ காமெடி மேட்ச்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *