வை ராஜா வை திரைவிமர்சனம்

205

vai-raja-vai

கௌதம் கார்த்திக் தனது அப்பா இயக்குனர் வசந்த், அம்மா, அக்கா காயத்ரி ரகுராம் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலே அடுத்து என்ன நடக்கும் என்பது அவருடைய எண்ணத்தில் உதிக்கும். அதையெல்லாம் வெளியே சொல்லி பல இடங்களில் பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார். இதனால் அவருடைய அப்பா, இனிமேல் அதுபோல் உனக்கு தோன்றினால் யாரிடமும் வெளியே சொல்லாதே என்று அதட்டி வைக்கிறார்.

வளர்ந்து பெரியவனாகி, சிறுவயது தோழனான சதீஷின் அலுவலகத்திலேயே இவரும் வேலைக்கு சேருகிறார். இதற்கிடையில் நாயகி ப்ரியா ஆனந்தும் இவரும் காதலித்து வருகிறார்கள். கௌதம் வேலை பார்க்கும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் விவேக் யாரிடமும் சரியாக பேசாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்து வருகிறார். அவரிடம் இவர் பேச நினைக்கிறார். விவக்கோ இவரை ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை.

இந்நிலையில் ஒருநாள் அவர்களுடைய அலுவலகத்தில் ஆடிட்டிங் நடைபெறுகிறது. அதற்காக முதல்நாள் இரவு தயாராகிக் கொண்டிருக்கும்போது, கௌதம் மனதில் நவம்பர் 11, 2011-ம் ஆண்டுக்கான ரெக்கார்டைத்தான் அவர்கள் கேட்பார்கள் என்று தோன்றுகிறது. இதை தனது சக அதிகாரிகளிடம் கூறுகிறார். அவர்களும் அதைத் தேடிப் பார்க்கிறார்கள். அது கிடைக்கவில்லை. எனவே, போலியாக அந்த தேதிக்கு புதிய பைலை தயார் செய்து வைக்கிறார்கள்.

மறுநாள் ஆடிட்டிங் செய்ய வரும் அதிகாரிகள் குறிபிட்டு கெளதம் சொன்ன தேதியில் உள்ள ரெக்கார்டை கேட்கவும், அனைவரும் ஆச்சர்யப்படுகிறார்கள். அவன் சாதாரணமாகத்தான் இதைச் சொன்னான் என்று அனைவரும் இருக்க, ஆனால் விவேக்கு மட்டும் இவனுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நினைக்கிறார்.

இதையடுத்து கௌதமும், விவேக்கும் நண்பர்களாகி விடுகிறார்கள். இருவரும் சேர்ந்து ஹோட்டல், பார்ட்டி என்று ஊர் சுற்றுகிறார்கள்.  கௌதமை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு நிறைய பணத்தை இழந்துவிட்ட விவேக், கௌதமை வைத்து சூதாடி, அந்த பணத்தை மீட்க முடிவெடுக்கிறார்.

விவேக்கின் இந்த திட்டத்திற்கு கௌதம் முதலில் மறுக்கிறார். பின்னர், தனது அக்காவின் கல்யாணத்துக்கு பணம் தேவைப்படுவதால் இதை செய்ய நினைக்கிறார். அதில் விளையாடி நிறைய பணமும் சம்பாதிக்கிறார். இந்த சூதாட்டத்தில் கௌதம் நிறைய பணம் ஜெயித்து விட்டதால் சூதாட்ட கும்பலின் தலைவனான டேனியல் பாலாஜி வெறுப்படைகிறான். அவன் யார் என்பதை அறிய தனது ஆட்களை அனுப்பி தூக்கி வரச் சொல்கிறான்.

அவர்களும் விவேக் வீட்டுக்கு சென்று கௌதமையும், விவேக்கையும் தூக்கி வருகிறார்கள். நேரடியாக கௌதமை சோதனை செய்ய நினைக்கிறான். கிரிக்கெட்டில் கௌதம் சொல்வதுபோல் நடந்துவிட்டால் 1 கோடி தருகிறேன் என்றும், அப்படி நடக்காவிட்டால் 70 லட்சம் தனக்கு தரவேண்டும் என்று கூறுகிறான். ஆனால் கௌதம் சொல்வது போலவே நடப்பதால் கௌதமுக்கு 1 கோடி கொடுத்து அனுப்புகிறான் டேனியல் பாலாஜி

பணத்தை வாங்கிக் கொண்ட விவேக்கும், கௌதம் கார்த்திக்கும் பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள். ஆனால், தன்னிடமிருந்து அவ்வளவு பெரிய பணம் வீணாகிவிட்டதே என்று டேனியல் பாலாஜி வெறுப்படைகிறார். தன்னுடைய தலைவனாக குமாருக்கு இவ்வளவு பணத்துக்கும் என்ன பதில் சொல்வது என்று குழம்புகிறான்.

இதற்கிடையில், கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கோவாவுக்கு விவேக், கௌதம், சதீஷ் மூன்று பேரும் போகிறார்கள். அங்கு ஜாலியாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு டேனியல் பாலாஜி வருகிறார். கோவாவில் மிகப்பெரிய கப்பலில் நடக்கும் கேஸினோ ராயல் என்ற சூதாட்டக் கிளப்பில் போய் சூதாடுவதற்கு கௌதமை வற்புறுத்துகிறார்.

ஆனால், இதற்கு கௌதம் மறுக்கிறார். ஆனால், டேனியல் பாலாஜியோ, பிரியா ஆனந்தையும், சதீஷையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இதையடுத்து இதற்கு சம்மதிக்கிறார் கௌதம். இவருக்கு கேஸினோ ராயல் விளையாட்டை கற்றுக் கொடுப்பதற்காக டாப்சியும், மனோபாலாவும் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் கௌதமுக்கு அந்த விளையாட்டை பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பின்னர், டாப்சி, மனோபாலா, விவேக், டேனியல் பாலாஜி, பிரியா ஆனந்த், கௌதம் ஆகியோர் அந்த கப்பலுக்கு சென்று அந்த சூதாட்டத்திலும் கலந்து கொள்கிறார்கள். அங்கு சில கோடிகளை அள்ளிய பின்னர், டேனியல் பாலாஜியை மட்டும் சூதாட்டக் கும்பலிடம் மாட்டிவிட்டு, இவர்கள் தப்பித்து சென்னைக்கு செல்கிறார்கள். அந்த சூதாட்ட கும்பலிடம் இருந்து டாப்சி உதவியால் காப்பாற்றப்படும் டேனியல் பாலாஜி கௌதமை பழிவாங்க சென்னைக்கு வருகிறார்.

இறுதியில் பாலாஜி, கௌதமை பழிவாங்கினாரா?  இந்த பிரச்சினைகளிலிருந்து கௌதம் எப்படி தப்பித்தார்? என்பதே மீதிக்கதை.

கௌதம் கார்த்திக் இந்த படத்தில் ரொம்பவும் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், எல்லா காட்சியிலும் ஒரே மாதிரியான முகபாவணையை கொடுப்பதுதான் ரசிக்க முடியவில்லை. பிரியா ஆனந்துடன் காதல் செய்யும் காட்சிகளில் கொஞ்சம் ரொமான்ஸ் காட்டியிருக்கிறார்.

பிரியா ஆனந்துக்கு இந்த படத்தில் நாயகனை காதலிப்பதும், அவருடன் கைகோர்த்துக் கொண்டு நடப்பதுதான் வேலை. மற்றபடி, இவருக்கு நடிப்பதற்குண்டான வாய்ப்பே குறைவுதான். இரண்டாம் பாதியில் வரும் டாப்சி, சிறிது நேரமே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார். விவேக் வரும் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு கியாரண்டி கொடுக்கலாம். இவர் அடிக்கும் ஒவ்வொரு கமெண்டுக்கும் தியேட்டரில் கைதட்டல் விழுகிறது.

தனது முந்தைய படத்தைவிட இந்த படத்தை மிகவும் சிறப்பாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ். சூதாட்டம் நடத்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. அழகான திரைக்கதையமைத்திருக்கிறார். ஆனால், இறுதிக்காட்சி காமெடியாக அமைந்ததுதான் சற்று ஏமாற்றம். இருப்பினும் ரசிக்கத் தோன்றுகிறது.  யுவன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை கலக்கல்.

மொத்தத்தில் வை ராஜா வை கிங் மேக்கர்.