கர்ப்ப கால ஆலோசனைகள்

16129

கர்ப்ப காலம் என்பது கருத்தரிக்கும் நாள் முதல் பிரசவம் நிகழும் காலம் வரையிலானது ஆகும். பொதுவில், 28 நாட்களுக்கு ஒருமுறை
மாதவிலக்கு ஏற்படும். சிலருக்கு இது மாறுபடும்.

இந்த 28 நாட்கள் கணக்கினை வைத்தே அதாவது ஒரு மாதவிலக்கு சுற்று இதனை வைத்தே 10 மாதம் என்று கூறப்படுகிறது. கடைசி மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து 280வது நாள் பிரசவ காலமாக கணக்கிடப்படுகிறது.

அதாவது, முந்தைய மாதவிலக்கில் இருந்து 40-வது வாரம் பிரசவ வாரம் எனலாம். கருத்தரிக்கும் வாய்ப்பு, மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து 14 -16 நாட்களிலேயே அதிகம் என்பதால், கணக்கிடும் பிரசவ தேதியில் சற்று ஏறத்தாழ பிரசவம் ஏற்படும்.

40 வாரம் = 9 மாதம் + 1 வாரம்; 4.4 வாரம் = ஒரு மாதம் ஆணின் விந்து, பெண்ணின் கருமூட்டையுடன் இணைந்து ஒரு செல் உருவாகின்றது. இதுவே, கரு உருவாகுதல் ஆகும். இது மிக மிக மிக சிறியதாக இருக்கும். இது அக்குழந்தையின் `ப்ளூ பிரிண்ட்’ ஆகும்.

அக்குழந்தையின் பிறப்பு அதாவது, அக்குழந்தை ஆணா, பெண்ணா, அதன் முடி, கண் நிறம், சரும நிறம், உயரம் என அத்தனையும் அந்த ஒரு சிசுவில் துல்லியமாய் இருக்கும். இனி, ஒவ்வொரு வாரமும் அக்குழந்தை எப்படி உருவாகின்றது, தாய்க்கு என்னென்ன உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றது என்று பார்ப்போம்.

1-ம் மாதம், முதல் வாரம்: கருவுற்ற தாய், தான் கர்ப்பம் தானா? என்று கூட உணர்ந்திருக்க மாட்டார். ஆனால், பல விஷயங்கள் அவருள்ளும், அவரது கருவினுள்ளும் நிகழ்ந்திருக்கும். பொதுவில் கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் பெண்களுக்கு ஓர் அறிவுரை. ஃபோலிக் ஆசிட் 10 இக்கால கட்டத்தில் மிக மிக அவசியம் ஆகின்றது.

1-ம் மாதம், 2-வது வாரம்: இப்பொழுதும் தாய், தன் கர்ப்பத்தினை உணராதோ, உறுதி செய்யாதோ இருக்கலாம். ஆனால், அவரது உடல் ஹார்மோனை பக்கெட் பக்கெட்டா சுரக்கும். தாய் தனது மாதவிலக்கு இன்னும் வரவில்லையே என்று நினைக்கும் நேரத்திலேயே இரண்டு வார காலம் முடிந்திருக்கும். ஃபோலிக் ஆசிட், சத்துணவு, சத்து மாத்திரை இவை பெரிதும் உதவும்.

1-ம் மாதம், 3-வது வாரம்: இந்த காலக்கட்டத்தில் தாய் மருத்துவர் உதவியோடு, மருத்துவ பரிசோதனை மூலம் தன் கர்ப்பத்தினை உறுதி செய்து இருப்பார். வாந்தி, காலையில் வயிற்று பிரட்டல் போன்றவை ஆரம்பிக்கும். இந்தக் காலக்கட்டத்தில் கருவில், மூளையின் உருவாக்க அடிப்படை, முதுகுத் தண்டுவடம், நரம்பு மண்டலம் என உருவாகி இருதயத் துடிப்பு எட்டிப் பார்க்கும்.

1-ம் மாதம், 4-வது வாரம்: இந்தக் காலக்கட்டத்தில் குழந்தை மூன்று மில்லி மீட்டர் அளவிற்கும் குறைந்ததாக இருக்கும். மூளையும், நரம்பு மண்டலமும் வடிவம் பெறும். முதுகு எலும்பு, தசைகள், கை, கால், கண், காது பிரிவுப்பட ஆரம்பிக்கும். கருப்பையின் உள்ளே குழந்தை பாதுகாப்பிற்காக தடித்த, மென்மையான மெத்தைப் போன்ற அமைப்பு உருவாகும்.

இக்கால கட்டத்தில் தாய்க்கு அடிக்கடி சிறுநீர் போகும். வாந்தி, குமட்டல் கூடுதலாய் இருக்கும். இக்காலக்கட்டத்தில் ஆரோக்கியமான உணவு அவசியம். காப்பியின் அளவினைக் குறைந்துக் கொள்ள வேண்டும். தாய், தன் பல் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இது, குழந்தைப் பிறந்த ஒரு வருடம் வரை கவனம் தேவை.
Each month the advice of pregnant women
2-ம் மாதம், 5-வது வாரம்: குழந்தை 5 மில்லி மீட்டர் உயர அளவு இருக்கலாம். குழந்தைக்கு விரல்கள் உருவாக தொடங்கும். ஒரு சில தாய்மாருக்கு சில ரத்தச் சொட்டுகள் வெளிப்படலாம்.

ஒரு சிலருக்கு கருச்சிதைவோ அல்லது கருப்பை குழாய் கர்ப்பமாகவோ இருக்கலாம். அவசியம் மருத்துவ பரிசோதனை தேவை. மற்றபடி சாதாரண வேலைகளை சுறுசுறுப்பாய் செய்துக் கொண்டு கர்ப்பக்கால உடற்பயிற்சிகளை மருத்துவ ஆலோசனைப்படி செய்யவேண்டும்.

சிலருக்கு அதிகச் சோர்வு, தலைவலி போன்றவை ஏற்படலாம். அவர்கள் மதியம் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. இரவில், வெகுநேரம் கண்விழிப்பதை கண்டிப்பாய் தவிர்த்து விட வேண்டும். மனதினை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள வேண்டும்.

2-ம் மாதம், 6-வது வாரம்: ஒரு கசகசா அளவில் இருந்த இருதயம் சிறு குழாய் போல் நீண்டு 4 அறைகள் உருவாகும். கைகள், கால்கள் மேலும் உருவாகும். இக்காலக் கட்டத்தில் குழந்தையின் மூளையின் அலைத் திறனைக் கூட பதிவு செய்ய முடியும். மூளை, உறுப்புகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.

தாய்க்கு சுத்தமான காற்றோட்டம் அவசியம். மாலை வெய்யிலில் சிறிதுநேரம் உலாவுவது நல்லது. வைட்டமின் `டி’ சத்து அவசியம். தாய்க்கு அடிக்கடி சிறுநீர் பிரியும்.

2-ம் மாதம், 7-வது வாரம்: குழந்தை ஒரு சிறிய பீன்ஸ் கொட்டை அளவு இருக்கும். கைகள், கால்கள் நன்கு வளரும். இருதயத் துடிப்பு இருக்கும். தாய், இந்தக் காலக்கட்டத்தில் உடல்நலம் இல்லாதவர்கள், நோயாளிகள் இவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.

செல்லப் பிராணிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். தாய்க்கு சில வகை உணவுகள் சாப்பிட ஆசையாய் இருக்கும்.

2-ம் மாதம், 8-வது வாரம்: குழந்தை சுமார் எட்டு முதல் 10 மில்லி மீட்டர் வரை வளர்ந்திருக்கும். கருப்பை இரண்டு மடங்காக பெரிதாக இருக்கும். கைகள், கால்கள், விரல்கள் என இருக்கும். இருதயத் துடிப்பு நிமிடத்திற்கு 160 அளவில் இருக்கும்.

சருமம் மிக மிக மெலிதாய் இருக்கும். மிகச்சிறிய மனித உருவத்தில் அனைத்தும் இருக்கும். தாய்க்கு சற்று சோர்வு தெரியும். மருத்துவர் உங்களது இரும்புச் சத்து, ரத்தக்கொதிப்பு, பரம்பரை பிரச்சனைகள் ஏதேனும் உள்ளதாப என சோதனை செய்வார்.

3-ம் மாதம், 9-வது வாரம்: குழந்தையின் உறுப்புகள், நரம்புகள் வேலை செய்யத் துவங்கும். தன்னை நீட்டி மடக்கி குழந்தை உள்ளே நகரும். தன் விரல்களை வளைத்து உள்ளங்கை வரை கொண்டு செல்லும்.

தாய்க்கு மார்பக உள்ளாடை இறுகுவதால், கண்டிப்பாய் அதன் அளவினை மாற்ற வேண்டும். ஹார்மோன் காரணத்தால் திடீரென மகிழ்ச்சி ஆகவும், திடீரென அழவும் செய்வர். மூக்கடைப்பு ஏற்படலாம். சிலருக்கு மூக்கில் ரத்தக் கசிவு இருக்கலாம். சிறிதும் பயமில்லை. மருத்துவ உதவி பெறவும்.

3-ம் மாதம், 10-வது வாரம்: குழந்தையின் தாடை எலும்பு உருவாகும். இருதயம் முழுதாய் உருவாகி இருக்கும். சிசுவால் விழுங்க முடியும். நெற்றியை சுருக்க முடியும். கருப்பை மேலும் பெரிதாகும். தாய், தன்னை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்வது அவசியம்.

3-ம் மாதம் 11-வது வாரம்: சிசு சுமார் 2 இன்ச் நீளம் இருக்கும். சிறுநீர் வெளிப்படும். முக அமைப்பு உண்டாகும். நகங்கள் இருக்கும். சிசுவின் அளவில் மூன்றில் ஒரு பங்கு தலையாக இருக்கும். எடை கூடும்.

3-ம் மாதம், 12-வது வாரம்: முதல் மூன்று மாதத்தின் கடைசி வாரம். குழந்தை 6 செ.மீ., அளவு வளர்ந்திருக்கும். மணிக்கட்டு, முழங்கை அசைவு இருக்கும். கருப்பையில் குழந்தை நன்கு சுற்றும்.

சிசு தூங்கும், விழிக்கும். உடற்பயிற்சி போல் தசைகளை அசைக்கும். தலை திருப்பும். வாயை திறந்து மூடும். தாய்க்கு வாந்தி, வயிற்றுப் பிரட்டல் இருந்தால் நன்கு குறையும்.

3-ம் மாதம், 13-வது வாரம்: தாய்க்கு ரத்தக் கொதிப்பு, எடை, சிறுநீர், கருப்பை வளர்ச்சி, குழந்தை இருதயத் துடிப்பு போன்ற பரிசோதனைகளை மருத்துவர் செய்வார். சத்து மாத்திரைகளை தேவைக்கேற்ப பரிந்துரைப்பார்.

[review]