எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் திரைவிமர்சனம்

357

 

mskr

ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாக குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இதில் வங்கியில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் கும்கியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இவருக்கு ஆப்ரேஷன் செய்ய 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை தன் நண்பர்களிடம் சொல்லி பணத்தை ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறார்கள்.

எங்கு கேட்டும் பணம் கிடைக்காமல் போகிறது. குறித்த நேரத்தில் அவர்களால் பணம் ஏற்பாடு செய்ய முடியாததால் கும்கியின் தாயார் இறந்து போகிறார். இதனால் மனவேதனையில் நான்கு பேரும் குடிபோதையில் கும்கி வேலை பார்க்கும் வங்கியில் இருக்கும் பணத்தை திருடி ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி ஏடிஎம்-ல் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள்.

ஏடிஎம்-ல் உள்ள கேமராவில் தங்கள் முகம் பதிவாகாமல் இருக்க எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரின் போஸ்டர்களை முகமூடி போல் அணிந்துக் கொண்டு கொள்ளையடிக்க செல்கின்றனர். ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை போட வரும் வங்கி அதிகாரியான நிரோஷாவை அடித்து மயங்க வைத்து பணத்தைக் கொள்ளையடித்து விட்டு நிரோஷாவையும் அழைத்து செல்கிறார்கள்.

இவர்கள் கொள்ளையடித்து வரும் வழியில் ராபர்ட்டை ஒரு தலையாக காதலித்து வரும் திருநங்கையான ராம்ஜி, இவர்களை பார்த்து விடுகிறார். அவரையும் அழைத்துக் கொண்டு ஒரு மறைவான இடத்திற்கு அனைவரும் சென்று விடுகிறார்கள். அங்கு நண்பர்கள் நான்கு பேரும் தூக்க கலகத்தில் இருக்கும் போது திருநங்கையான ராம்ஜி திருடிய பணத்தை எல்லாம் எடுத்து சென்று விடுகிறார். விழித்துப் பார்க்கும் இவர்கள் அதிர்ந்து போகிறார்கள். ராம்ஜி தான் எடுத்து வந்த பணத்தை திருப்பி தரவேண்டுமானால் ராபர்ட் என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.

இதற்கிடையில், ஏ.டி.எம் கொள்ளை சம்பவம் போலீஸ் அதிகாரியான ஐஸ்வர்யாவிற்கு தெரிய வருகிறது. உடனே விசாரிந்து கொள்ளைக்கு காரணமான நண்பர்கள் நான்கு பேரையும் தேடி வருகிறார்.

இறுதியில் நண்பர்கள் நான்கு பேரை போலீசார் பிடித்தார்களா? திருநங்கை ராம்ஜியை ராபர்ட் திருமணம் செய்து பணத்தை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

நடன இயக்குனரான ராபர்ட் முதல் முறையாக இயக்குனராகவும் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நடனத்தால் ரசிகர்களை கவர்ந்த இவர் நடிப்பாலும் இயக்கத்தாலும் கவர்வார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இவரது நடிப்பை ஏற்றுக் கொண்ட அளவுக்கு இவரது படத்தின் இயக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படத்தை சுவாரஸ்யம் இல்லாமலேயே கொண்டு சென்றிருக்கிறார். இவருடைய நடனத்தால் பாடல் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கிறார் நடிகை வனிதா. இவருடைய புது முயற்சிக்கு பெரிய பாராட்டுக்கள். ஆனால், திரைக்கதையை தெளிவில்லாமல் அமைத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்விலும் தோல்வியடைந்திருக்கிறார். நல்ல திறமையான கதாபாத்திரங்களை அமைத்து கூடுதல் சுவாரஸ்யத்தோடு உருவாக்கியிருந்தால் ரசித்திருக்கலாம்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நல்ல நடிப்பை வாங்கியிருக்கலாம்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவில் சரவணன் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்’ சுவாரஸ்யம் குறைவு.