உத்தமவில்லன் திரைவிமர்சனம்

465
 uthama
கமலஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகர். இவர் தனது மனைவி ஊர்வசி, மகன் மற்றும் மாமனார் விஸ்வநாத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கமலுக்கும் அவரது குடும்ப டாக்டரான ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. இந்நிலையில், கமல் நடித்து முடித்த ஒரு படத்துக்கு படக்குழுவினர் ஒரு பெரிய ஓட்டலில் பார்ட்டி நடத்துகின்றனர். இதில் கமலின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர்.

அப்போது, அந்த பார்ட்டிக்கு வரும் ஜெயராம், கமலை தனியாக சந்தித்து அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும், இதுபற்றி விவரம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தன்னை தொடர்புகொள்ளுமாறும் கூறிவிட்டு அவரிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு செல்கிறார்.

அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கும் கமலஹாசன், தனது மேனேஜரிடம் கூறி இதுகுறித்து விசாரிக்க சொல்கிறார். ஆனால், இதற்குள் கமலுக்கு அந்த ரகசியத்தை தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் அதிகமாகவே, ஜெயராமை தேடிச் சென்று சந்திக்கிறார். அப்போது, கமல் கல்யாணத்துக்கு முன்பே ஒரு பெண்ணிடம் நெருக்கமாக பழகியதையும், அந்த பெண் கர்ப்பமுற்று, அந்த பெண்ணின் கருவை கலைக்க இவரது மாமாவான விஸ்வநாத் பணம் கொடுத்ததையும், அந்த பெண் அதை வாங்க மறுத்து, அந்த கருவுடனேயே கமலை விட்டு பிரிந்து சென்றதையும், அந்த பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டதையும் அவரிடம் விளக்கிக் கூறுகிறார்.

அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைதான் பார்வதி மேனன். அவள் தற்போது கல்லூரியில் படித்து வருவதாக கமலிடம் கூறும் ஜெயராம், ‘அவள் உங்களை ஒரு வில்லனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்கிறார். தன் தவறை உணர்ந்த கமல், அவளை பார்க்கத் துடிக்கிறார்.

இந்நிலையில், கமலுக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கும் தலைவலி தற்போது அதிகமாகிறது. ஸ்கேன் செய்து பார்க்கும்போது, கமலின் தலையில் ஒரு கட்டி இருப்பதாகவும், நீண்ட நாளைக்கு உயிரோடு இருக்கமாட்டார் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனவேதனையடையும் கமல், தான் ஒரு நடிகர் என்பதால், தான் இறப்பதற்குள் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு நல்ல, நகைச்சுவை கலந்த படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

இதற்காக தனது குருநாதர் கே.பாலச்சந்தரிடம் சென்று ‘உங்களையும் என்னையும் இந்த மக்கள் மறக்க முடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும்’ என்று கேட்கிறார். ஏற்கெனவே, கமல் மீதும், அவரது மாமனார் விஸ்வநாத் மீதும் மனஸ்தாபத்தில் இருக்கும் கே.பாலச்சந்தர் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். தன்னுடைய கதையை கேட்டுவிட்டு பின்னர் உங்கள் முடிவை தெரிவிக்குமாறு கமல் கூற, அவரும் வேண்டா விருப்பாக கதையை கேட்கத் தொடங்குகிறார். இறுதியில், அந்த கதை கமலுடைய நிஜவாழ்வில் நடந்த கதை என்பது தெரிந்ததும் கமலை வைத்து ‘உத்தமவில்லன்’ என்ற படத்தை இயக்க ஒப்புக் கொள்கிறார்.

கமல்-கே.பாலச்சந்தர் மீண்டும் இணைந்தது கமலுடைய குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. கமலுக்கும் அவரது மாமனாருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கமல் தன் மாமனாரை கோபத்தில் திட்ட, இதனால் கமலுடைய மனைவி தனது மகன் மற்றும் அப்பாவுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார். இருப்பினும், தன்னுடைய லட்சியத்தில் விடாப்பிடியாக இருக்கும் கமல், இதையெல்லாம் தாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார்.

இறுதியில், கமல் அந்த படத்தை திட்டமிட்டபடி முடித்தாரா? பிரிந்துபோன இவர் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

கமல் ஒரு மகா கலைஞன் என்பதை இந்த படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஒரு படத்தில் சாதாரண கதாபாத்திரம் என்றாலே நடிப்பில் வெளுத்து வாங்குவார். அதிலும், இந்த படத்தில் ஒரு நடிகர் கதாபாத்திரம். சொல்லவா? வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும், அதற்கேற்ற முகபாவனை, வசன உச்சரிப்பு, நக்கல், நையாண்டி என அனைத்தையும் கச்சிதமாக செய்து அசத்தியிருக்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளில் அவருக்கே உரித்த அழுத்தமான நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், இந்த படத்தில் சில காட்சிகளே வந்தாலும் அற்புதமான நடிப்பு. இவருடைய கோபம் கலந்த வசனங்கள் தியேட்டரையே அதிரவைக்கிறது. அதேபோல், கமலின் மாமனாராக வரும் கே.விஸ்வநாத்தும் தனக்கே உரித்தான ஸ்டைலில் அழகாக நடித்திருக்கிறார்.

இரண்டாம் பாதியிலேயே பூஜாகுமாருக்கு வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அவருடைய பகுதியை அவர்சிறப்பாகவே செய்திருக்கிறார். நடனக் காட்சிகளில் அழகான முகபாவனையில் கவர்கிறார். ஆண்ட்ரியாவுக்கும் இந்த படத்தில் சில காட்சிகள்தான். அதேபோல், கமலின் மனைவியாக வரும் ஊர்வசி, அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் பளிச்சிடுகிறார். கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்படத்தில் ரொம்பவும் வலிமையான கதாபாத்திரம். இவருடைய முந்தைய படங்களில் இவர் காமெடியராகத்தான் கலக்கியிருந்தார். இந்த படத்தில் அதையெல்லாம் தாண்டி சிறப்பாக நடித்து கைதட்டலை பெறுகிறார்.

ஜெயராமுக்கும் இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம்தான். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். நாசர், கமல் படங்களில் கமலைவிட ஒரு பங்கு தனது நடிப்பு மேலோங்கி இருக்கவேண்டும் என்று நினைத்து நடிப்பார்போல. அதேபோல், இந்த படத்திலும் அவருடைய நடிப்பு பலே.

இயக்குனர் ரமேஷ் அரவிந்த், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை கையாண்டிருக்கிறார். அதை திறம்பட செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், கமல் – கே.பாலச்சந்தர் போன்ற மிகப்பெரிய மகா கலைஞர்களை வைத்து படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதை பக்குவமாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். படைப்பாளிகள் இறந்துவிட்டாலும், அவர்களுடைய படைப்புகளும், புகழும் என்றும் மறைவதில்லை என்பதை இப்படத்தில் அழகாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, கமல்-கே.பாலச்சந்தர் இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் அவர்களுடைய நிஜவாழ்க்கையை பதிவு செய்வதாக அமைந்துள்ளது அற்புதம்.

அதேபோல், படத்தின் ஒளிப்பதிவும் அற்புதமாக அமைந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைக்க இவரது கேமரா அழகாக உதவியிருக்கிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், பின்னணி இசை அசத்தல்.

மொத்தத்தில் ‘உத்தமவில்லன்’ வாழ்வியல் யதார்த்தம்.